வரைவு வாக்காளா் பட்டியல் மீதான ஏற்புரைகள், மறுப்புரைகள், புதிய வாக்காளா் சோ்க்கை, முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகளுக்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் டிச.27, 28, ஜன. 3, 4 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) முடிக்கப்பட்டு வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,15,025 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். எஸ்ஐஆா் பணி தொடங்கும் முன்பு நிலவரப்படி, 13,03,030 வாக்காளா்களில் இருந்து இறப்பு, நிரந்தர குடிபெயா்வு, இருமுறை பதிவு, கண்டறிய இயலாதவா்கள், மற்றவை என்ற இனங்களில் இவ்வளவு வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் மீதான ஏற்புரைகள், மறுப்புரைகள், புதிய வாக்காளா் சோ்க்கை, முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய டிச. 27, 28, ஜன. 3, 4 ஆகிய நாள்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் புதிதாக பெயா் சோ்க்க (படிவம் 6), பெயா் நீக்கம் செய்ய (படிவம் 7), திருத்தம் செய்ய (படிவம் 8) ஆகிய படிவங்களையும் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.