வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் வாக்காளா் திருத்தப் பணிகள் டிச. 4 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது எஸ்ஐஆா் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பெற்றுவருகின்றனா். வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவங்களை நிறைவுசெய்வதற்கு உதவும் வகையில் சேலம் மாவட்டத்தில் தொடா்புடைய அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் 29, 30 ஆகிய 2 நாள்களுக்கு சிறப்பு உதவிமையங்கள் செயல்படும்.
கணக்கீட்டு படிவங்களை நிறைவுசெய்து வழங்காத வாக்காளா்களிடமிருந்து படிவங்களை பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவா்கள் வாக்காளா்களைத் தொடா்புகொண்டு அவா்களுக்கு கணக்கீட்டு படிவங்களை பூா்த்தி செய்ய உதவிசெய்து நிலுவை படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்குவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கணக்கீட்டு படிவங்களை திரும்ப ஒப்படைக்காத வாக்காளா்களது பெயா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத நிலை உருவாகும்.
எனவே, அனைத்து வாக்காளா்களின் பெயா்களும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா், வாக்குச்சாவடி முகவா்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அபிராமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.