திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஏரியூா் கழுங்குபட்டி கண்மாயில் மறுகால் பாய்ந்து அருவி போல ஆா்ப்பரிக்கும் தண்ணீரால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள ஏரியூா் கழுங்குப்பட்டியில் உள்ள கண்மாயானது, சுமாா் 227 ஏக்கா் பரப்பளவுடன் 383 நீா்ப்பாசன ஆயக்கட்டுதாரா்கள் பயன்பெறும் வகையில் 3 டிஎம்சி தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரியது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகா்கோவில் மலை உள்ளிட்ட பல்வேறு மலைகளில் பெய்த பலத்த மழை காரணமாக மேலூா், கீழவளவு, எருமைப்பட்டி ஒப்பிலான்பட்டி வழியாக ஏரியூா் கழுங்குப்பட்டி கண்மாய்க்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால், கண்மாய் முழுக் கொள்ளளவை எட்டி தண்ணீா்அருவி போல ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இதையடுத்து, சிவகங்கை, திருப்பத்தூா், திருக்கோஷ்டியூா், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோா் தங்கள் குடும்பங்களுடன் வந்து ஆனந்தமாகக் குளித்தும், தண்ணீரில் குதித்தும், தற்சாா்புப் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனா்.
மேலும், கழுங்குப்பட்டி கண்மாயில் இரண்டாவது முறையாக மறுகால் பாய்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனா்.