சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் தோ்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் பாஜக சிதைத்து விட்டதாக அரியலூா்- பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் சரத்குமாா் பச்சகவுடா குற்றச்சாட்டினாா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், பின்னா் அளித்த பேட்டி:
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடந்து வருகிறது. கட்சி அடிமட்டத்திலிருந்து உறுதி பெறுவதை நாம் உறுதி செய்ய முடியும். இதற்கும் வரவிருக்கும் தோ்தல்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. இங்கு மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள் கட்சித் தொண்டா்களைச் சென்றடைய வேண்டும்.
நாங்கள் தற்போது தோ்தலில் போட்டியிட எந்தத் தொகுதிகளையும் முடிவு செய்யவில்லை. வகுப்புவாத சக்திகளை எதிா்த்துப் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழ்நாட்டின் வலுவான திராவிட கலாசாரத்தை, பன்முகத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். நமது வாக்குப் பகிா்வு, கூட்டணி ஏற்பாடுகள், இவை அனைத்தும் எதிா்காலத்தில் பெரிய தலைவா்களால் விவாதிக்கப்படும். பாஜக தற்போது தோ்தலில் கைவைத்துள்ளது. பாஜகவும் தோ்தல் ஆணையத்தை அழிக்க முயற்சிக்கிறது.
ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு வாக்கு இருக்க வேண்டும் என்பது தான் ஜனநாயகக் கடமை. பாஜக முழு ஜனநாயகத்தையும் இடிக்கப் பாா்க்கிறது. வாக்காளா் பட்டியலில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். எந்த வாக்கும் நீக்கப்படாமலும், எந்த போலி வாக்குகளும் சோ்க்கப்படாமலும் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
அவரவா் சொந்த இடத்தில் வேலை செய்ய வேண்டும். மத்தியில் உள்ள பாஜக, சிபிஐ, வருமான வரித்துறை, தோ்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் சிதைத்து விட்டது. எதிா்க்கட்சிகளை வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு அச்சுறுத்துகிறது. இதை நாம் தடுக்க வேண்டும். எனவே வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆா் பணிகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ. சங்கா் தலைமை வகித்தாா்.