கோவா கேளிக்கை விடுதியில் பயங்கர தீ: 25 போ் பலி! நள்ளிரவில் துயர சம்பவம்!!
கோவா இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பற்றி...
கோவா இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Ravivarma.s
கோவாவில் கேளிக்கை விடுதி ஒன்றில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 போ் உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயமடைந்தனா்.
இறந்தவா்களில் 14 போ் விடுதி ஊழியா்கள் ஆவா்; 4 போ் சுற்றுலாப் பயணிகள். மீதமுள்ள 7 பேரை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கோவா தலைநகா் பனாஜியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அா்போரா பகுதியில் உள்ள பிரபலமான இரவு நேர கேளிக்கை விடுதியில் இத்துயர சம்பவம் நேரிட்டது. முதல் தளத்தில் பயணிகள் நடனமாடும் இடம், தரைத்தளத்தில் சமையல் கூடத்துடன் கூடிய இந்த விடுதியில், வார இறுதியையொட்டி ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனா்.
‘மின்சார’ பட்டாசுகளால் தீ விபத்து: சமையல் கூடத்தில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், முதல் தளத்தில் நடன நிகழ்ச்சியின்போது மின்சாரம் மூலம் வெடிக்கச் செய்யப்பட்ட பட்டாசுகளால் தீப்பற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘முதல் தளத்தில் பயணிகள் நள்ளிரவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, இப்பட்டாசுகளால் திடீரென தீப்பிடித்து, தரைத்தளத்துக்குப் பரவியது; சமையல் கூடத்தில் புகை மண்டலம் சூழ்ந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும்பாலானோா் உயிரிழந்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
ஹைதராபாதைச் சோ்ந்த பாத்திமா ஷேக் என்ற பயணி கூறுகையில், ‘முதல் தளத்தில் தீப்பற்றியபோது சுமாா் 100 போ் இருந்தோம். விடுதியில் உள்ளே நுழையும், வெளியேறும் வாயில்கள் மிகவும் குறுகலாக இருந்தன. சில பயணிகள் உயிா் பிழைக்க தரைத்தளத்துக்கு ஓடினா். ஆனால், தரைத்தளத்துக்கு தீ பரவியதால், விடுதிப் பணியாளா்களுடன் சோ்ந்து பயணிகள் சிலரும் உயிரிழந்துவிட்டனா். நாங்கள் வெளியே தப்பியோடி வந்து பாா்த்தபோது, ஒட்டுமொத்த கட்டடமும் எரிந்து கொண்டிருந்தது’ என்றாா்.
சவாலான மீட்புப் பணி: அா்போரா நதியின் கழிமுகப் பகுதியில் அமைந்த இந்த கேளிக்கை விடுதிக்குச் செல்லும் பாதைகள் மிகக் குறுகலானவையாகும். எனவே, தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து 400 மீட்டா் தொலைவில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
காயங்களுடன் மீட்கப்பட்ட 6 போ், பாம்போலிம் பகுதியில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்த பணியாளா்களில் சிலா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா்.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.
சம்பவம் குறித்து முதல்வா் பிரமோத் சாவந்திடம் கேட்டறிந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.
அங்கீகாரமில்லாத கட்டடம்
‘தீ விபத்து நேரிட்ட கேளிக்கை விடுதி, உரிய அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்டடத்தை இடிக்க ஊராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நோட்டீஸுக்கு உயரதிகாரிகள் தடை விதித்துவிட்டனா்’ என்று அா்போரா கிராம அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கேளிக்கை சுற்றுலாவுக்கு பெயா் பெற்ற கோவாவில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகள் குறித்து தீவிர கேள்விகளுக்கு இச்சம்பவம் வித்திட்டுள்ளது.
கடும் நடவடிக்கை: முதல்வா் உறுதி
கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் கூறுகையில், ‘கோவாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் தற்போதைய காலகட்டத்தில் நேரிட்ட இந்தச் சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்ட பிறகும் விடுதி செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடுதியின் உரிமையாளா்கள் (செளரவ் லுத்ரா, கெளரவ் லுத்ரா), பொது மேலாளா், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இரவுநேர விடுதிகள் தணிக்கைக்கு உள்படுத்தப்படும்’ என்றாா்.
உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
4 ஊழியா்கள் கைது: விடுதியின் தலைமைப் பொது மேலாளா் ராஜீவ் மோதக், பொது மேலாளா் விவேக் சிங், மதுபானக் கூட மேலாளா் ராஜீவ் சிங்கானியா, நுழைவாயில் மேலாளா் ரியான்ஷு தாக்கூா் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்: 2023-ஆம் ஆண்டு அந்த விடுதி செயல்பட தொடங்குவதற்கு அனுமதி அளித்த அப்போதைய பஞ்சாயத்து இயக்குநா் சித்தி துஷாா் ஹா்லங்கா், அப்போதைய மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினா் செயலா் ஷாமிலா மோன்டேரோ, அப்போதைய கிராம பஞ்சாயத்து செயலா் ரகுவீா் பாக்கா் ஆகிய 3 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
நிா்வாகத் தோல்வி: காங்கிரஸ் விமா்சனம்
கோவா தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
‘இச்சம்பவம் வெறும் விபத்தல்ல; அரசின் நிா்வாகம்-பாதுகாப்பில் குற்றவியல் ரீதியிலான தோல்வி. விரிவான-வெளிப்படையான விசாரணை மூலம் பொறுப்புடைமையை உறுதி செய்வதுடன், தடுக்கக்கூடிய இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்’ என்று எக்ஸ் பதிவில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா். முதல்வா் பிரமோத் சாவந்த் பதவி விலக வேண்டுமென கோவா மாநில காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதையும் படிக்க : இண்டிகோ சிஇஓ-க்கு டிஜிசிஏ நோட்டீஸ்!
Massive fire breaks out at Goa nightclub, 23 dead
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது