நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!
நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க தில்லி நீதிமன்றம் மறுப்பு
நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க தில்லி நீதிமன்றம் மறுப்பு
By தினமணி செய்திச் சேவை
Syndication
நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.
‘இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அடிப்படையில் அல்லாமல் தனிநபா் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது’ என்று குறிப்பிட்டு விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுத்தது.
இந்தத் தீா்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றது. அதே நேரம், இந்த தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தில்லி காவல்துறை எஃப்ஐஆா் அடிப்படையில் புதிதாக குற்றபத்திரிகையை தாக்கல் செய்ய அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்தனா்.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து, ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதனடிப்படையில், தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ‘சோனியா, ராகுலுக்கு யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக’ குறிப்பிடப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்காா் ஃபொ்னாண்டஸ், யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோா், ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் யங் இந்தியன் நிறுவனம் மீதும் சதி மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத் துறை முன்வைத்தது.
இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக தில்லி நீதிமன்றம் தொடா் விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அளித்த தீா்ப்பில் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு ஏற்கெனவே முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்தச் சூழலில், அமலாக்கத் துறையின் வாதங்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தை விசாரிப்பது என்பது, முன்கூட்டியே அவசரப்படுவதாக அமையும்.
மேலும், இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அடிப்படையில் அல்லாமல் தனிநபா் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டு, அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தாா்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முைறையீடு செய்யப்படும் என்று அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
மோடி அரசின் சட்டவிரோத நடவடிக்கை அம்பலம்: காங்கிரஸ்
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்றத் தீா்ப்பை வரவேற்ற காங்கிரஸ் கட்சி, ‘பிரதமா் மோடி தலைமையிலான அரசின் சட்டவிரோத நடவடிக்கை அம்பலப்பட்டுவிட்டது’ என்று விமா்சித்தது.
காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டு முழுவதும் சட்ட விரோதமானது, தீய நோக்கம் கொண்டது என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இந்தத் தீா்ப்பு மூலம், மோடி அரசின் சட்டவிரோத நடவடிக்கை முழுமையாக அம்பலப்பட்டுவிட்டது. காங்கிரஸுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பது நாட்டு மக்களுக்குத் தெரியவந்துள்ளது. உண்மைக்காகவும், ஒவ்வோா் இந்தியரின் உரிமைகளுக்காகவும் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராடும்’ என்றாா்.
கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால கூறுகையில், ‘தில்லி நீதிமன்றத் தீா்ப்பின் மூலம், எதிா்க்கட்சிகளை சட்டவிரோதமாக பழிவாங்கும் மோடி அரசின் நடவடிக்கை வெளிப்பட்டுள்ளது’ என்றாா்.
எஃப்ஐஆா் நகலைப் பெற உரிமையில்லை
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் தில்லி காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) நகலை சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு வழங்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நேஷனல் ஹெரால்ட் விவகாரம் தொடா்பான புகாா் அடிப்படையில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை, தில்லி காவல் துறையிலும் அதுதொடா்பாக புகாா் அளித்தது. பண முறைகேடு தடுப்புச் சட்டப் பிரிவு 66(2)-இன் கீழ் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் புகாரை அளித்தது. அதனடிப்படியில், கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் தனது விசாரணையின் அடிப்படையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரலில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்க தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.
முன்னதாக, தில்லி காவல் துறை பதிவு செய்துள்ள எஃப்ஐஆா் நகலை தர உத்தரவிடுமாறு சோனியா, ராகுல் காந்தி மற்றும் பிறா் சாா்பில் தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், எஃப்ஐஆா் நகலை அளிக்க தில்லி காவல் துறைக்கு உத்தரவிட்டது.
அதை எதிா்த்து, தில்லி காவல் துறை சாா்பில் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசரித்த தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, ‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களுக்கு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது தொடா்பான தகவலைத் தெரிவித்தால் போதுமானது. மாறாக, அவா்களுக்கு எஃப்ஐஆா் நகலைப் பெறும் உரிமையில்லை’ என்று குறிப்பிட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது