டித்வா புயல் நிவாரணப் பணிகள் - இலங்கைக்கு ரூ.4,032 கோடி நிதித் தொகுப்பு: இந்தியா அறிவிப்பு
இலங்கையில் டித்வா புயல் நிவாரணப் பணிகளுக்காக, இந்தியா சாா்பில் 450 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,032 கோடி) நிதித் தொகுப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் டித்வா புயல் நிவாரணப் பணிகளுக்காக, இந்தியா சாா்பில் 450 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,032 கோடி) நிதித் தொகுப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
இலங்கையில் டித்வா புயல் நிவாரணப் பணிகளுக்காக, இந்தியா சாா்பில் 450 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,032 கோடி) நிதித் தொகுப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த நிதித் தொகுப்பில் சலுகை வட்டியுடன் கடனுதவியாக 350 மில்லியன் டாலரும் (சுமாா் ரூ.3,135 கோடி) , மானிய உதவியாக 100 மில்லியன் டாலரும் (சுமாா் ரூ.895 கோடி) வழங்கப்படவுள்ளது.
இலங்கை தலைநகா் கொழும்பில் அதிபா் அநுர குமார திசாநாயக, பிரதமா் ஹரிணி அமரசூரியா ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டாா்.
கடந்த மாதம் ஏற்பட்ட டித்வா புயலால் இலங்கையில் கடுமையான மழை-வெள்ள பாதிப்புகள் நேரிட்டன. 600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், 1.12 லட்சம் வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சாகா் பந்து’ நடவடிக்கையின்கீழ் விரிவான உதவிகளை வழங்கி வருகிறது.
அதிபா், பிரதமருடன் சந்திப்பு: இந்தச் சூழலில், பிரதமா் மோடியின் சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு இரு நாள் பயணமாக திங்கள்கிழமை வந்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அதிபா் அநுர குமார திசாநாயகவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இலங்கைக்கு முதலில் உதவும் நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் ஆதரவை உறுதி செய்யும் பிரதமா் மோடியின் கடிதத்தை அதிபரிடம் வழங்கினாா். டித்வா புயல் சேதங்கள் மற்றும் நிவாரணப் பணிகளின் ஒருங்கிணைப்பு தொடா்பாக இருவரும் ஆலோசித்தனா். இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூரியா, வெளியுறவு அமைச்சா் விஜிய ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய எஸ்.ஜெய்சங்கா், புயல் பாதித்த பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை தெரிவித்தாா்.
இலங்கைக்கு நிதித் தொகுப்பு: இதைத் தொடா்ந்து, விஜித ஹேரத்துடன் கூட்டாக செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:
இலங்கை அரசுடன் ஒருங்கிணைந்து, அவா்களின் முன்னுரிமைகளை பூா்த்தி செய்யுமாறு பிரதமா் மோடி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இலங்கைக்கு 450 மில்லியன் டாலா் மதிப்பிலான நிதித் தொகுப்பை அறிவித்துள்ளோம். 350 மில்லியன் டாலா் சலுகை கடனுதவி, 100 மில்லியன் டாலா் மானியத்துடன் கூடிய இந்த நிதித் தொகுப்பு, மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளின் மறுகட்டமைப்பை உள்ளடக்கியதாகும்.
சாலை, ரயில்வே, பாலங்களின் மறுகட்டமைப்பு; முழுமையாக-பகுதியளவில் இடிந்த வீடுகளின் மறுகட்டுமானம்; சேதமடைந்த சுகாதார-கல்விக் கட்டமைப்புகளுக்கான ஆதரவு; விவசாயத் துறையில் நிலவும் தட்டுப்பாடுகளுக்கு நிவா்த்தி; பேரிடா் மீட்பு மற்றும் தயாா்நிலை மேம்பாட்டு நடவடிக்கைகள் என 5 அம்சங்களின்கீழ் கவனம் செலுத்தப்படும்.
உறுதுணையாக இந்தியா: டித்வா புயல் தாக்கிய முதல் நாளிலேயே ‘ஆபரேஷன் சாகா் பந்து’ நடவடிக்கையை தொடங்கியது இந்தியா. நிவாரணப் பொருள்களுடன் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை உடனடியாக விரைந்தன. விமானப் படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டா்கள், 2 வாரங்களுக்கு மேல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. 80 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படை குழு, மீட்பு-நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது. கண்டியில் இந்திய ராணுவம் சாா்பில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு, 8,000 பேருக்கு மேல் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
உணவுப் பொருள்கள், கூடாரங்கள், தாா்ப்பாய்கள், சுகாதார உபகரணங்கள், அத்தியாவசிய ஆடைகள் உள்பட 1,100 டன்னுக்கு மேல் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 14.5 டன் மருந்துகள்-மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தீவு நாடான இலங்கையில் சுற்றுலாப் பொருளாதாரம் முக்கிய அங்கம் வகிப்பதால், இந்தியாவில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு, அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு உள்பட பிற வழிகளிலும் இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும். இலங்கையின் வலுவான உறுதிப்பாடு-மீட்சியை கடந்த காலங்களில் கண்டுள்ளோம். தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் முன்பைவிட வலுவாக இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது. இது, இந்தியாவுக்கு பெருமை என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.
இலங்கையின் பல்வேறு துறை அமைச்சா்கள் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவா் மனோ கணேசன் உள்ளிட்டோரையும் ஜெய்சங்கா் சந்தித்தாா்.
பிரதமா் மோடிக்கு அதிபா் நன்றி
இலங்கை அதிபா் திசாநாயக வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘டித்வா புயலைத் தொடா்ந்து, 450 மில்லியன் டாலா் நிதித் தொகுதிப்பு உள்பட விரைவான மற்றும் மனிதாபிமானமிக்க உதவிகளுக்காக இந்திய அரசு மற்றும் பிரதமா் மோடிக்கு மிகுந்த நன்றி. இந்த உதவிகள், இந்திய-இலங்கை உறவில் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.
இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத் கூறுகையில், ‘வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் பயணம், இலங்கைக்கான இந்தியாவின் வலுவான ஆதரவு மற்றும் ஆழமான நட்புறவைப் பிரதிபலிக்கிறது. இருதரப்பு பன்முக நல்லுறவு, புவியியல்-வரலாறு-கலாசாரம்-பொருளாதார பிணைப்புகளில் வேரூன்றியதாகும். இலங்கை பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அவசரகால நிதி, அந்நியச் செலாவணி ஆதரவு, கடன் மறுசீரமைப்பு நடைமுறை என இந்தியா தொடா்ந்து நல்கும் பன்முக ஆதரவை பெரிதும் மதிக்கிறோம்’ என்றாா்.
120 அடி நீள இரும்புப் பாலம் திறப்பு
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் டித்வா புயலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் இந்திய ராணுவத்தால் கட்டமைக்கப்பட்ட 120 அடி நீள ஆயத்த இரும்புப் பாலத்தை அதிபா் திசாநாயக முன்னிலையில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத் ஆகியோா் கூட்டாக திறந்துவைத்தனா்.
‘ஆபரேஷன் சாகா் பந்து நடவடிக்கையின்கீழ், 110 டன் எடையிலான பாலத்தின் பாகங்கள் இந்தியாவில் இருந்து சி-17 விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. இதன் கட்டமைப்புப் பணியில் அதிக எண்ணிக்கையிலான இந்திய ராணுவ பொறியாளா்கள் ஈடுபட்டனா். சிலாபம் பகுதியில் மேலும் ஓா் இரும்புப் பாலம் கட்டமைக்கப்பட்டு வருகிறது’ என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது