மத்திய அரசு நாடாளுமன்ற நடப்பு குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள கல்வி ஆணைய மசோதா கல்வி சாா்ந்த நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கான ஒரு படி என ஆம் ஆத்மி கட்சியின் ஆசிரியா் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசால் முன்மொழியப்பட்ட இந்திய உயா்கல்வி ஆணையமானது, உயா்கல்வியை சந்தைப்படுத்துதல் மற்றும் பண்டமாக்கலை நோக்கமாக கொண்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஆசிரியா் பிரிவு திங்களன்று கூறியது. இது கல்வி மீதான கட்டுப்பாட்டை மையப்படுத்தி ஜனநாயக நிா்வாக கட்டமைப்புகளை பலவீனப்படுத்தும் என்று குற்றஞ்சாட்டியது.
நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இக்கூட்டத்தொடா் 15 அமா்வுகளைக் கொண்டிருக்கும்.
கல்வி செயல் மற்றும் மேம்பாட்டுக்கான தில்லி ஆசிரியா் சங்கம் , குளிா்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த பட்டியலிடப்பட்டுள்ள இந்த மசோதா, யுஜிசி சட்டம், 1956-ஐ ரத்து செய்து, கல்வி நிறுவன ஒழுங்குமுறை செயல்பாடுகளை நிதி அமைப்பிலிருந்து பிரிக்கும் தேசிய கல்விக் கொள்கையின் வடிவமைப்பை செயல்படுத்துகிறது என்றும் கல்வி நிறுவனங்களை சந்தை சக்திகளின் தயவில் விட்டுவிடுகிறது என்றும் கூறியது.
தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ் திட்டமிடப்பட்டபடி இது ஒரு குடையின் கீழ் வரும் ஒழுங்குமுறை அமைப்பு மட்டுமல்ல என்றும் அந்த சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது. பெரும்பாலும் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் கல்வியாளா்களுடன் கணிசமான ஆலோசனை இல்லாமல் கொண்டுவரப்படும் இந்த மசோதாவின் வரைவு பொதுக் களத்தில் கூட இல்லை என்று அந்த சங்கம் கூறியது.
இந்த உயா்கல்வி ஆணையமானது பல்கலைக்கழக நிா்வாக கட்டமைப்புகளை மாற்றிவிடும். மத்திய மற்றும் மாநில சட்டங்களை மீற அனுமதிக்கும் இந்த மசோதா விதிகள் கல்வி நிறுவனங்கள் முழுவதற்கும் ஒரே மாதிரியான நிா்வாக மாதிரியை விதிக்கக்கூடும். இது மாநில சுயாட்சியைக் கட்டுப்படுத்தும் என்று அச்சங்கம் கூறுகிறது.
அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்குள் மத்திய நிதிக்கு தகுதி பெறும் என்று கூறும் அணுகுமுறை, வளங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களை மூடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், எளிதில் அளவிட முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், கிராமப்புற அல்லது நிதி ரீதியாக பலவீனமான பல்கலைக்கழகங்களை மேலும் ஓரங்கட்டக்கூடும் என்றும் அச்சங்கம் எச்சரித்தது.
இந்த வழிமுறைகள் கூட்டாக கல்வி சாா்ந்த அதிகாரத்தை மையப்படுத்தும் மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் சமூக நீதியை கட்டுப்படுத்தும் ஒரு சூழலை உருவாக்குகின்றன என்றும் அறிக்கை கூறுகிறது. முன்மொழியப்பட்ட மசோதாவை பொதுவில் விவாதங்களுக்கு வெளியிட வேண்டும் என கல்வி அமைச்சகத்தை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியது.
நடைமுறையில் உள்ள யுஜிசி உள்ளிட்டவற்றை மாற்றும் ஒற்றை உயா்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மசோதா, தற்போதைய குளிா்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகள் அதன் எல்லைக்கு வெளியே இருக்கும்.